×

₹20க்கும் குறைவான லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நன்றி கனிமொழி எம்பி அமைச்சர்கள் பங்கேற்பு

கோவில்பட்டி, ஜூலை 2: தீப்பெட்டி தொழிலில் பாதிப்பை ஏற்படுத்திய ₹20க்கும் குறைவான லைட்டர்களை இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு தடை விதிக்க காரணமாக இருந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர். இந்தியாவில் 90 சதவீதம் தீப்பெட்டிகள் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி விருதுநகர் மற்றும் தென்காசி, நெல்லை மாவட்டங்கள், வேலூர் மாவட்டம் குடியாத்தம், காவிரிப்பூம்பட்டினம் போன்ற பகுதியில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. தீப்பெட்டி தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

தீப்பெட்டி தொழில் தொடங்கி நூறாவது ஆண்டு கொண்டாடும் நிலையில் பல்வேறு இன்னல்கள் தொழிலுக்கு வந்த போதிலும் தீப்பெட்டி தொழில் அதை எல்லாம் கடந்து இன்றைக்கும் நடைபெற்று வருகிறது.
மூலப்பொருட்களின் விலை உயர்வு ஒரு புறம் பாதிப்பை ஏற்படுத்தினாலும், சந்தையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய சீன பிளாஸ்டிக் லைட்டர்களால் தீப்பெட்டி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு, உற்பத்தி முற்றிலுமாக குறையும் சூழ்நிலை ஏற்பட்டது. ₹5 முதல் ₹10 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு லைட்டரால் 20 தீப்பெட்டி விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால் இத்தொழிலை நம்பியிருந்த இருந்த 6 லட்சம் தொழிலாளர்கள் போதிய வேலை கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே சீன லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும் இதுதொடர்பாக தென்தமிழக மக்களின் தொழில் வளர்ச்சியிலும் வாழ்வாதாரத்திலும் அக்கறை காட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆகியோர் டெல்லி வரை சென்று இதே கருத்தை வலியுறுத்தினர். இதையடுத்து லைட்டர்கள் விற்பனைக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இருபது ரூபாய் அல்லது அதற்கு மேல் விலை கொண்ட லைட்டர்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அதற்கு கீழ் விலை குறைவாக உள்ள லைட்டர்கள் இறக்குமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.

ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தீப்பெட்டி விற்பனை அதிகரிப்பதோடு உற்பத்தியும் பெருகும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களுடைய கோரிக்கைக்கு உறுதுணையாக இருந்து 6 லட்சம் தீப்பெட்டி தொழிலாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய பிரதமர் நரேந்திரமோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, பேராசிரியர் ராம நிவாசன் ஆகியோருக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம், துணைத்தலைவர் கோபால்சாமி, சாத்தூர்-தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் லட்சுமணன், துணைத்தலைவர் பெருமாள்சாமி, அகில இந்திய தீப்பெட்டி தொழில் கூட்டமைப்பின் தலைவர் நூர் முகமது, குடியாத்தம் -தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித்தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி தடை ஆணை பெற்றுத் தந்தமைக்காக நன்றி தெரிவித்தனர்.

அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், கோவில்பட்டி நகர செயலாளரும், நகராட்சி சேர்மனுமான கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம், துணை தலைவர் கோபால்சாமி, தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் சாத்தூர் செயலாளர் ராஜேஷ் பெருமாள், துணைத் தலைவர் பெருமாள்சாமி, பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் சூர்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

The post ₹20க்கும் குறைவான லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நன்றி கனிமொழி எம்பி அமைச்சர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Kanimozhi ,Ministers ,Kovilpatti ,Union government ,Dinakaran ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...